தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. கொள்கை - கோட்பாடுகளை முன்னெடுப்பதிலும்; அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும்; ஆட்சி நிர்வாக நடைமுறைகளிலும் எனப் பல்வேறு தளங்களில் பிற மாநிலங்களிலிருந்து மாறுபட்டு முற்போக்கான வழிமுறைகளைப் பின்பற்றும் சிறப்புக்குரிய மாநிலம் தமிழ்நாடு என்பது நாடறிந்த ஒன்றாகும்.
சமூகநீதி, மாநில சுயாட்சி, மொழி - இன உரிமைகள் மற்றும் கலாச்சார உரிமைகள் போன்றவற்றில் மிகவும் உறுதியாக நின்று, அதேவேளையில், ‘இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு’ எவ்வகையிலும் பாதிக்காதவாறு வாதாடிப் -போராடித் தனது தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறது.
குறிப்பாக, இந்திய அரசமைப்புச் சட்டம் முன்னிறுத்தும் மதச்சார்பின்மை, பன்மைத்துவம், கூட்டாட்சியம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய கோட்பாடுகளைப் பாதுகாக்கும் வகையில், வலதுசாரி- பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராகச் சற்றும் பின்வாங்காமல் தீவிரமாகப் போராடி வருகிறது. இத்தகைய சிறப்பான அரசியல் மாண்புகளைக் கொண்டதோர் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரும் அவரது கருத்தியல் தலைமை மாணாக்கர் பேரறிஞர் அண்ணாவும் இம்மண்ணில் விதைத்த ‘சமத்துவச் சிந்தனை’களே அடிப்படைக் காரணங்களாகும். அவையே இன்று ‘திராவிட அரசியல்’ என அறியப்படுவதாகும். சமூகத்தில் நெடுங்காலமாக நிலைத்து நிற்கும் பாகுபாடுகளுக்கும் அவற்றினடிப் படையிலான வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கும் காலம் காலமாக நீடிக்கும் உழைப்புச்சுரண்டலுக்கும் மூலாதாரங்களாக விளங்கும் ‘சனாதனச் சிந்தனைகளே’ காரணங்களாகும். அவையே இன்று ஆரியமாக அல்லது பார்ப்பனியமாக அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா என்பதாக அறிப்படுவனவாகும்.
திராவிடம் என்கிற சமத்துவக் கோட்பாடு
பெரும்பான்மையான உழைக்கும் எளிய மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்கள் திமிறி எழுவதற்கே இடமளிக்காதவகையில், திட்டமிட்ட கொடூரமான ஒடுக்குமுறைகளின் மூலம் அவர்களின் உழைப்பை, ஈவிரக்கமின்றிச் சுரண்டிக் கொழிக்கும் எத்தர்கள், உயர்த்திப் பிடிக்கும் கோட்பாடான சனாதனத்துக்கு எதிராக, தமிழ்மண்ணில் பெரியாரும் அண்ணாவும் சமூகநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய சனநாயகக் கோட்பாடுகளைப் பரப்பி மக்களை அரசியல்படுத்தினர். அவையே இன்று திராவிடம் என்கிற சமத்துவக் கோட்பாடாகச் செழுமை பெற்றுள்ளது. இக்கோட்பாடு சனாதனச் சக்திகளை அம்பலப்படுத்தி வருகிறது. அக்கும்பலின் அதிகார வலிமையை நிலைகுலையச் செய்கிறது. படிப்படியாக அவர்களின்ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்து அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்து எளியோரையும் அதிகாரமயப்படுத்துகிறது.
இந்தப் புரட்சிகர மாற்றங்களை ஏற்க மனமில்லாதவர்கள் ‘திராவிடம்’ என்கிற கருத்தியலை எதிர்த்து நெடுங்காலமாகக் கூச்சலிட்டு வருகின்றனர். குறிப்பாக, மனுதர்ம நெறிகளை, சனாதனக் கொள்கைகளைப் புனிதமெனக் கருதிப் போற்றுபவர்கள், திராவிடத்தின்மீது பகைமை கொண்டு அதற்கு எதிராகப் பல்வேறு சதிகளைத் தீட்டி, திரிபுவாதக் கருத்துகளைப் பரப்பி, பண்டிதர் அயோத்திதாசர் காலத்திலிருந்தே செயல்பட்டு வருகின்றனர். அதாவது, திராவிடம் எனும் சமத்துவக் கருத்தியலுக்கு எதிராக பார்ப்பனியம் என்னும் சனாதனக் கருத்தியல் செயல்பட்டு வருகிறது.
பார்ப்பனியத்தின் பகை திராவிடமே
திராவிடத்தின் பகை பார்ப்பனியமே. பார்ப்பனியத்தின் பகை திராவிடமே.திராவிடம் என்பது தமிழுக்கோ, தமிழருக்கோ, தமிழ்நாட்டுக்கோ எதிரானது அல்ல; மாறாக, தமிழ் உணர்வையும், தமிழ்ப் பாதுகாப்பையும் உயர்த்திப் பிடிப்பதே ஆகும். அத்துடன், இந்தி மற்றும் சமற்கிருதம் ஆகியவற்றைத் திணித்து மெல்லத் தமிழை அழித்தொழிக்கும் பார்ப்பனியச் சதி முயற்சிகளை முறியடிப்பதில் இது தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் வெளிப்படையாகத் தமிழர்கள்மீது திணிக்கும் முயற்சியைத் திராவிடம் தடுத்திராவிட்டால், எப்போதோ தமிழினம், இந்தி பேசும் இனமாக மாறியிருக்கும். அவ்வாறின்றி, இன்று மொழிஉணர்வும் இன உணர்வும் தமிழர்களிடையே மேலோங்கியிருப்பதற்கும்; தமிழ்த்தேசியம் என்னும் மொழிவழித் தேசிய அரசியல் வெகுமக்களின் உரையாடலுக்குட்பட்ட ஒன்றாகப் பரிணாமம் அடைந்திருப்பதற்கும்; திராவிடத்தின் தாக்கமே முதன்மையான காரணியாகும். அதாவது, திராவிடம் என்பது தமிழ்த்தேசியத்துக்கு எதிரானது அல்ல. மாறாக, ‘பார்ப்பனிய தேசியவாதம்‘ அல்லது ‘இந்துத்துவா’ என்னும் ‘சங்பரிவார்களின் மதவழித் தேசியவாதத்துக்கு’ எதிரானது ஆகும்.
பார்ப்பனிய தேசியவாதம்
‘சனாதனச் சக்திகளான ‘பார்ப்பன - பனியா’ - என்னும் உயர்சாதி மற்றும் உயர்வருண அடிப்படையிலான ‘கூட்டு மேலாதிக்க இந்துப் பெரும்பான்மைவாதம்’; ‘இந்தி-சமற்கிருதம்’ என்னும் அடிப்படையிலான ‘உயர்சாதி மொழிவழித் தேசியவாதம்’ மற்றும் ‘இந்துஸ்தான் அல்லது இந்துராஷ்ட்ரா’ என்னும் ‘மதச்சார்பு அரசுவழி தேசியவாதம்’ஆகியவையே இந்துத்துவா தேசியவாதம் அல்லது பார்ப்பனிய தேசியவாதமாகும். இத்தகைய தேசியவாதத்தின் அடிப்படையில், இந்தியாவின் மாநிலங்கள் அனைத்தையும் ‘ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம்’ கொண்ட ‘ஒரே தேசமாக’ மாற்றி அமைத்திட, அதன்மூலம் தேசத்தின் பன்மைத்துவத்தைச் சிதைத்திட, பிற்போக்குச் சக்திகளான வலதுசாரிகள் முயற்சிக்கிற போதெல்லாம், அதனை முறியடிக்கும் வகையில் போராடுகிற போர்க்குணம் கொண்ட முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிது.
கொள்கைப் பகைவர்களின் சதிமுயற்சிகள்
இந்தியாவெங்கிலும் இந்திமயமாக்கல், சமற்கிருதமயமாக்கல், சனாதனமயமாக்கல், கார்ப்பரேட்மயமாக்கல் போன்ற புதுதில்லி ஆட்சியாளர்களின் பேராதிக்கப் போக்கு களை எதிர்த்து, இன்றும் தமிழ்நாடு சமரசமின்றிக் குரலெழுப்பி வருகிறது. இத்தகைய இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகள் தழைப்பதற்கு இம்மண்ணில் ஆழ வேர் பிடித்துள்ள ‘திராவிட அரசியலே’ காரணம் ஆகும். ஆகவேதான், திராவிட அரசியலைக் குறிவைத்து அதனைத் தகர்த்தெறிவதற்குப் பலரும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர். பண்டிதர் காலம் தொடங்கி பெரியார், அண்ணா, கலைஞர் என தற்போதைய காலம் வரையில், கொள்கைப் பகைவர்களின் இத்தகைய சதிமுயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
சனாதன சக்திகள் வெளிப்படை யாகவும் மறைமுகமாகவும், தமிழ்மண்ணில் நிலைபெற்றுள்ள, -வலுப்பெற்றுள்ள சமூகநீதி என்னும் திராவிட அரசியலுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களில் சிலர் வெவ்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு திராவிடத்துக்கு எதிரான திரிபு வாத அரசியலைப் பரப்பி வருகின்றனர். சனாதன சக்திகளின் நெடுங்காலச் செயல்திட்டத்துக்கு ஏதுவாக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
சிலர் பெரியாரின் சிந்தனைகளை ஆதரிக்கிறவர்களாகவும் அதேவேளையில் சனாதனிகளின் நோக்கங்களுக்குத் துணை போகிறவர்களாகவும் செயல்படுகின்றனர். சிலர், பெரியாரின் அரசியல்தான் தமிழ்த்தேசியம் வளர்வதற்குத் தடையாக உள்ளது என்று வெளிப்படையாகப் பேசி, பெரியாரின் பிம்பத்தைச் சிதைப்பதில் தீவிரம் காட்டுகின்றனர்.
பெரியார் என்னும் அடையாளம்தான் இங்கே சனாதன எதிர்ப்பின் அடையாளமாக உள்ளது. எனவே, பெரியாரின் பிம்பத்தை நொறுக்க வேண்டுமென்று பல பத்தாண்டு களாக முட்டி மோதி, முக்கித் திணறிக் கொண்டிருக்கும் வகையறாக்கள், இன்று பார்ப்பனரல்லாத, ‘தமிழ் - தமிழர் - தமிழ்நாடு’ என்னும் பெயரில் அரசியல் பேசும் தமிழர்களைக் கொண்டே எதிர்க்கும் உத்தியைக் கையாளுகின்றனர். இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய முதன்மையான சவால்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டின் இத்தகைய போர்க்குணம் வாய்ந்த முற்போக்கான கருத்தியல் சிறப்புகளுக்கு தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் பங்களிப்பும் மகத்தானதாகும்.
திராவிடத்துக்கு எதிராகக் களமிறங்கியுள்ள பார்ப்பனரல்லாத திரிபுவாதக் கும்பல்
மனுநெறிகளுக்கு மாற்றாக குறள் நெறிகளை உயர்த்திப் பிடித்து இங்கே சமத்துவத்தை நிலைநாட்டப் போராடியவர் கலைஞர். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அய்யன் திருவள்ளுவரின் கோட்பாட்டையே தனது ஆட்சி நிர்வாகத்தின் தலையாய கோட்பாடாக முன்னிறுத்தியவர் கலைஞர். ஆகவேதான், அவரையும் அவரது கருத்தியல் பேராசான் தந்தை பெரியாரையும் சனாதன சக்திகள் தமது முதன்மைப் பகைவர்களாக முன்னிறுத்தி அவர்கள்மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள மதிப்பையும் நம்பகத் தன்மையையும் சீர்குலைப்பதில், தகர்ப்பதில் குறியாக உள்ளனர். அவர்கள் மட்டுமின்றி, அதே வேலைத்திட்டங்களுடன் திராவிடத்துக்கு எதிராகக் களமிறங்கியுள்ள பார்ப் பனரல்லாத திரிபுவாதக் கும்பலும் பெரியாரையும் கலைஞரையும் பகைவர் களாக முன்னிறுத்துவதில் குறியாக உள்ளனர். வழக்கம்போல வெளிப்படையாக நம்மோடு மோதும் சனாதன - ஆரியப் - பார்ப்பனிய - இந்துத்துவா சக்திகளையும்; நம்மைப் போலவே வேடமிட்டு நம்முடைய முகாமிலேயே நின்று இந்துத்துவா அரசியலைப் பேசும் சக்திகளையும்; தமிழ்த்தேசியத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தத்தில் மொழிவழித் தேசியத்துக்கே எதிரான மதவழித் தேசிய சங்பரிவார் கும்பலை எதிர்க் காமல், திராவிடமே முதல் எதிரி என திரிபுவாதம் பேசி பார்ப்பனிய தேசிய வாதத்துக்குத் துணைபோகும் சக்திகளையும்; சம காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு இன்று அனைத்து சனநாயக சக்திகளுக்கும் உள்ளது. இது காலத்தின் தேவையாகவும் வரலாற்றுக் கட்டாயமாகவும் உள்ளது.
சனநாயகத்தைப் பாதுகாக்கும் சமத்துவத்தை வென்றெடுக்கும் நோக்கிலான இந்தப் போர்க்களத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் கருத்தியல் போர்வாளான ‘முரசொலி’ இதழ் தொடர்ந்து பெரும் பங்காற்றி வருகிறது. அதன் பணிகள் மென்மேலும் சிறந்தோங்க, - வெற்றி பெற எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள் வாழ்த்துகள்.
நன்றி: முரசொலி பொங்கல் மலர், 2026