மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் !
உழைக்கும் மக்கள் யாவருக்கும் 'மே நாள்' நல்வாழ்த்துகள்!
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மோடி அரசு திரும்பப் பெறும் வரையில் அவற்றை எதிர்த்துப் போராட உறுதியேற்போம்!
தொல்காப்பியன் திருமாவளவன் அறிக்கை!
உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உழைக்கும் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுற்றைகள் மற்றும் சுரண்டல் கொடுமைகள் உலகெங்கும் காலமெல்லாம் தொடர்கின்றன. அவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கமும் இடையறாது போராடிக் கொண்டே உள்ளது.
முதலாளித்துவம் வல்லரசியமாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. சனநாயகம் சமூகநீதி போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டே, முதலாளித்துவம் உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் புதிய புதிய வடிவங்களில் தீவிரப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலும் இந்நிலையைத் தெளிவுறக் காணமுடிகிறது.
குறிப்பாக, கார்ப்பரேட் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து வருகிறது.
அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் கார்ப்பரேட் பெமுதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே நடைமுறையிலிருந்த நாற்பத்து நான்கு வகையான தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் நான்குச் சட்டங்களாகத் தொகுத்துள்ளது. இவை நான்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த நான்கு சட்டத் தொகுப்புகளும் நவம்பர் 21, 2025 முதல் நடைமுறைப்படுத்தப்படுமென பாஜக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் உழைக்கும் வர்க்கம் திரண்டு போராடியது.
விவசாயச் சட்டத்தை எதிர்த்து எப்படி தொடர் போராட்டங்களை நடத்தி மோடி அரசை அந்த சட்டங்களை திரும்பப் பெற வைத்து விவசாயச் சமூகம் வெற்றிக் கண்டதோ, அதேபோல் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறும் வரையில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது.
ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரையும் ஒடுக்கி முடக்கும் வகையில் இன்றைய பாஜக அரசு இயங்கிவருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பாதுகாவலர்களாக இந்திய ஆட்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், இந்திய தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து, நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறவைக்கவும்; இன்னபிற அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராட மே நாளில் உறுதியேற்போம்!
உழைக்கும் மக்களை ஒருங்கிணைப்போம்! - ஆதிக்க
ஒடுக்குமுறை-சுரண்டலை முறியடிப்போம்!
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
30.04.2026