விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், சென்னை கொளத்தூரில் 29.01.2026 அன்று ‘தழல் ஈகி’ முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் பேசும்போது, ‘சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அவர்களின் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது.’ ‘எனக்கு எந்த அரசன்மீதும் மதிப்பு கிடையாது. எவனையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சமஸ்கிருதமயமானது, இந்துத்துவமயமானது.
கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழைத் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள், பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான். வேள்வி நடத்தியவன், யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ்ப்பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களைத் தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள்.
இராஜராஜன் என்பது தமிழ்ப் பெயரா? இராஜேந்திரன் என்பது தமிழ்ப்பெயரா? எல்லாரும் வடமொழிப் பெயர்களைச் சூட்டிக்கொண்டவர்கள். வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே, எனக்கு ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை. அதில் உடன்பாடும் இல்லை. வெறும் மொழிப்பற்று எனக்குக் கிடையாது. வெறும் இனப்பற்று, இன உணர்வு எனக்குத் தேவையில்லை என்று கருதக்கூடியவன் நான். அதுதான் பெரியாரின் பார்வை. சாதியை ஒழிக்காமல் இங்கே சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது என உறுதியாக நின்றவர் தந்தை பெரியார்” என்று பேசினார்.
தமிழ் மன்னர்கள்மீதும் அந்த காலகட்டத்தின்மீதும் தொல்.திருமாவளவன் அவர்கள் வைத்த விமர்சனம் ஆய்வின் அடிப்படையில் சரியாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்; அவருடைய கருத்துக்கு எதிர்வினை ஆற்றுகிறவர்கள் ஆய்வின் அடிப்படையில் எதிர்வினை ஆற்ற வேண்டும். ஆனால், இதற்கு எதிர்வினை ஆற்றுகிறவர்கள் இராஜராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் யாராவது குறை கூறிவிட்டால், அவர்கள் தமிழினத்திற்கே எதிரிகள் என்ற கோணத்தில் விமர்சனங்களை அள்ளி வீசுவது ஏற்க முடியாத ஒன்று.
தொல்.திருமாவளவனின் பேச்சுக்கு ஐயா பெ.மணியரசன் ஆற்றியிருக்கும் எதிர்வினை:
“சிங்கள புத்தத்திற்குத் தமிழர்களை மாற்றிட தமிழ் மன்னர்களை எல்லாம் தாக்குகிறார் திருமாவளவன்!” என்கிறார். பேரரசன் இராஜராஜன், இராஜேந்திரன் காலத்திய சமூகப்போக்கை ஒருவர் விமர்சனம் செய்தால் அவர் புத்த மதத்தைப் பரப்ப முயற்சிக்கிறார் என்றா பொருள்?
திருமாவளவன் என்ன மதப் பிரசங்கம்தான் செய்துகொண்டிருக் கிறாரா? புத்தத்திற்கு மதம் மாற்றுவதைத் தான் அவர் தன் வேலையாக ஏற்றுக்கொண்டிருக்கிறாரா? அவருடைய உரை மக்களை மதம் மாற்றுவதற்கான உரையா? கடந்த பல்லவர் கால, சோழர் கால, பாண்டியர் கால சமூக - அரசியல் நிலைகள் பற்றிய கடுமையான விமர்சனம் அவருடையது. ஐயா மணியரசன் சான்றுகளின் அடிப்படையில் அவருடைய விமர்சனத்தை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால், எவ்வித தொடர்பும் இல்லாமல், தொல்.திருமாவளவன்மீது அபத்தமான ஒரு குற்றச்சாட்டை வைப்பது எல்லோரையுமே திகைக்க வைக்கிறது.
அது மட்டும் இன்றி, ஐயா மணியரசன் ‘தமிழ்மொழியையும், தமிழ் இனத்தையும் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டார்’ என்கிறார். தொல்.திருமாவளவன் உரையில் தேடித்தேடிப் பார்த்தாலும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் இழிவுபடுத்தக்கூடிய ஒற்றைச்சொல்கூட இல்லையே! ஆனாலும் அப்படி ஒரு குற்றச்சாட்டை ஐயா மணியரசன் வைக்கிறார். அதுமட்டுமின்றி, தொல்.திருமாவளவன் அவர்களை எதிர்த்து சாதிகளை எல்லாம் அணிசேர்க்கை செய்கிறார்.
“தமிழ்மொழியை தமிழ் இனத்தை இழிவுபடுத்தினால் தமிழர்கள் கட்சி வேறுபாடின்றி – சாதி வேறுபாடின்றி எதிர்ப்போம்!” என்கிறார். ஐயா மணியரசன் மேலும் கூறுகிறார்: “தமிழ் மன்னர்களைத் தாக்குவதற்காக, சூழ்ச்சியாக – தமிழ் மன்னர்கள் சமற்கிருதத்தை அனுமதித்தார்கள், - சமற்கிருதத்தில் பெயர் வைத்துக் கொண்டார்கள் - என்று தந்திரமாகப் பேசுகிறார் திருமா. தமிழர்களே விழிப்போடிருங்கள்!” என்கிறார்.
சாதிய உணர்வாளர்கள்
தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்தை அனுமதிக்கவில்லையா? சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துக்கொள்ளவில்லையா? தங்கள் நிர்வாகத்தில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தவில்லையா? சோழ, பாண்டிய மன்னர்கள் வருணாசிரமத்தை ஏற்றுக்கொள்ளவில்லையா? - என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் சான்றுகளின் அடிப்படையில் பேச வேண்டும்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர் களும் தொல்.திருமாவளவனைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்கள். திரு. அண்ணாமலை மாபெரும் மன்னர்களை தொல்.திருமாவளவன் அவதூறாகப் பேசுவதாகக் கூறுகிறார். அதாவது, அவர்களெல்லாம் மாபெரும் மன்னர்கள், பெரிய மனிதர்களைக் கண்டித்துப் பேசக்கூடாது என்பது அவர் பார்வை. தொல். திருமாவளவனைக் கண்டித்துப் பேசியவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் அனைவருமே சாதிய உணர்வாளர்களாகவும், பார்ப்பன ஆதரவாளர்களாகவும், இந்துத்துவ சிந்தனை கொணடவர்களாகவும் இருக்கிறார்கள்.
திரு. தொல்.திருமாவளவன் ‘தமிழ் மன்னர்களைத் திட்டமிட்டே தாக்குகிறார்’ என்று ஐயா மணியரசன் கூறுகிறார். ‘தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்கள், சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துக்கொண்டார்கள் - என்று கூறுவது, சூழ்ச்சியாக, தந்திரமாகப் பேசுவது’ என்று ஐயா மணியரசன் கூறுகிறார். திருமாவளவன் கூறியது சான்றுகளின் அடிப்படையில் தவறு என்றுதான் நிரூபிக்க வேண்டுமேயொழிய, அவர் சூழ்ச்சி செய்கிறார் என்றெல்லாம் பேசக்கூடாது.
சோழ மன்னர்கள் சமஸ்கிருதப் பெயர்களைச் சூடவில்லையா?
இராஜராஜன், இராஜேந்திரன் என்பவை தமிழ்ப்பெயர்களா? என்று திருமாவளவன் கேட்டதற்குப் பதிலாகச் சிலர், அருண்மொழி என்பது இராஜராஜனின் இயற்பெயர்; மதுராந்தகன் என்பது இராஜேந்திரனின் இயற்பெயர் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இராஜராஜ சோழன் அருள்மொழி தேவன் என்றும் அருண்மொழிவர்மன் என்றும் வரலாற்றில் அறியப்படுகிறான்.
இதில் தேவன் என்பது தமிழ்ச் சொல்லா? வர்மன் என்பது தமிழ்ச் சொல்லா? வர்ணாசிரமத்தில் இரண்டாம் நிலையில் இருக்கும் சத்திரியர்களின் பட்டப்பெயர்தான் வர்மன் என்பது. இராஜேந்திரன் என்பது தமிழா என்ற கேள்விக்குப் பதிலாக, அவருடைய இயற்பெயர் மதுராந்தகன் என்று கூறுகிறார்கள். மதுராந்தகன் என்பது தமிழா? மதுரம் என்ற சொல் தமிழா? மதுராந்தகன் என்ற சொல்லுக்கும் மதுரை நகருக்கும் தொடர்பு இல்லை. இராஜராஜன் சூடிக்கொண்ட அத்தனை பட்டப்பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள்தான்.
சமீப காலத்தில் பலர் ஆய்வு என்ற பெயரில் ‘சோழர்கள் காலத்தில் சாதிமுறையே கிடையாது என்றும், சோழர்கள் காலத்தில் வருணாசிரமம் கிடையாது என்றும், சோழர்களால் சமஸ்கிருதம் ஆதரிக்கப்படவில்லை ’என்றும், தொடர்ந்து எழுதி வருவதன் உண்மைத்தன்மையை நாம் ஆய்வு செய்தாக வேண்டும்.
பேரரசன் முதலாம் இராசராசன் (கி.பி.985-1014) காலத்தில் வர்ணாசிரமம் சோழப்பேரரசில் ஏற்கப்பட்டதா?
ஏற்கப்பட்டது என்பதே உண்மை. முதலாம் இராஜராஜனின் தந்தை சுந்தரச் சோழரின் காலத்திலேயே மனுதர்ம முறை தளர்ச்சி நீக்கி நிலை நிறுத்தப்பட்டதாக செப்பேட்டுச் சான்று கூறுகிறது.
சோழ மன்னர்கள் மனுநெறி காப்பதில் மகிழ்ச்சி கொண்டார்கள். சமஸ்கிருதத்திற்கு கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் முதலிடம் தந்தார்கள். தமிழைக் கற்பிக்க கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்படவில்லை. அவர்கள் உருவாக்கிய பெரிய கல்வி நிலையங்கள் எல்லாம் சமஸ்கிருதமே கற்பித்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். பிரமிக்க வைக்கும் பெரும் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முதலாம் இராஜராஜன் ஏற்ற பட்டங்களில் ஒன்று ‘சத்திரிய சிகாமணி’. இது சமஸ்கிருதப் பட்டம்தான். இதன் பொருள் சத்திரிய குலத்தின் தலைசிறந்த ரத்தினம் என்பதுதான். ‘சத்திரிய சிகாமணி’ என்ற சொல் சோழ மன்னர்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று. ‘சத்திரிய சிகாமணி வளநாடு’ என்று ஒரு நிர்வாகப் பிரிவு அப்போது இருந்தது. இன்றைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் ஆகியவை சத்திரிய சிகாமணி வளநாட்டில் அடங்கும். தஞ்சை பெரிய கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் பீடப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள நீண்ட கல்வெட்டில் இதற்குச் சான்றுள்ளது. (தென்னிந்திய கல்வெட்டு, தொகுதி: 2, பகுதி: 1, எண்: 69).
சத்திரிய சூடாமணி
இராஜராஜ சோழனின் தளபதி பஞ்சவன் மாராயன் என்பவன் கொங்கு பகுதியில் பெற்ற வெற்றிக்காக ‘சத்திரிய சிகாமணி கொங்கழ்வான்’ என்ற பட்டத்தை இராஜராஜ சோழன் வழங்கினான். தஞ்சை பெரிய கோயில் வடக்குச்சுவரில் இதற்கான சான்று கல்வெட்டாக உள்ளது (தென்னிந்திய கல்வெட்டு, தொகுதி: 2, பகுதி: 3, எண்: 66 ). முதலாம் இராஜராஜனின் மற்றொரு பட்டப்பெயர் ‘சத்திரிய சூடாமணி’. இது ஆனைமங்கலம் செப்பேட்டில் சமஸ்கிருதப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Larger Leiden Plates of Rajaraja I, Epigraphia Indica, vol. 22 , No.34, pp. 213 -236. )
மேலும், ஆனைமங்கலம் ‘சத்திரிய சூடாமணி வளநாடு’ என்ற நிர்வாகப் பகுதிக்குள் இருந்ததை ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது. முதலாம் இராசேந்திர சோழன் கி.பி 1020 இல் அவனுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வெளியிட்ட கரந்தை செப்பேட்டில் ‘சத்திரிய சிங்கன்’ என்று குறிப்பிடப்படுகிறான். அவன் தனது பெயரால் ‘சத்திரிய சிங்க வளநாடு’ என்ற நிர்வாகப் பிரிவையும் ஏற்படுத்தியிருந்தான். (The Karandai Tamil Sangam Plates of Rajendra chola I , Memoirs of the Archaeological Survey of India (MASI), No.79, Ed. K.V.Subrahmanya Aiyer, 1949).
முதலாம் இராஜராஜ சோழனின் இன்னொரு பட்டப்பெயர் ‘சத்திரிய பயங்கரன்’. இவர் பெயரால், ‘சத்திரிய பயங்கர வளநாடு’ என்ற ஒரு நிர்வாகப் பகுதி இருந்தது. (தென்னிந்திய கல்வெட்டு, தொகுதி: 2, பகுதி: 1, எண்: 1).
இராஜராஜ சோழனின் தனிப்பட்ட பாதுகாவலர் படைகளுள் ஒன்று ‘சத்திரிய சிகாமணி தெரிஞ்ச வலங்கை வேலைக்காரர்’ என்ற பெயரில் இருந்தது. தஞ்சை பெரிய கோயில் தெற்குச்சுவர் கல்வெட்டு (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி: 2, பகுதி: 1, கல்வெட்டு எண் 1 & 66)
மனு தருமம் பேணப்பட்ட காலம்
அன்பில் செப்பேடு என்பது சுந்தர சோழன் என்ற இரண்டாம் பராந்தகன் காலத்தில் நான்காவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 957) வெளியிடப்பட்டது. இது சோழ மன்னர்களின் வம்சாவளி குறித்து பேசுகிறது. பிரம்மன், மனு ஆகியோர் வழிவந்தவர்கள் சோழர்கள் என்றும், சுந்தரசோழன் ‘சத்திரிய சூடாமணி’ என்றும் புகழப்படுகிறான்.
அன்பில் செப்பேட்டில் சமஸ்கிருத பகுதியான பிரசஸ்தியை கவிஞர் நாராயணன் மற்றும் பிற்பகுதியை (தமிழில்) மாதவபட்டன் ஆகியோர் எழுதினர். இந்த செப்பேடுகளை பார்ப்பனர்களே எழுதினார்கள். சுந்தரச் சோழரின் அமைச்சர் அநிருத்த பிரம்மராயருக்கு மயிலாடுதுறை அருகே கருணாகரமங்கலம் என்ற ஊரை தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு ஆவணப்படுத்துகிறது. அநிருத்தருக்கு ‘பிரம்மாதிராஜன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தச் செப்பேடு, திருமால் உந்தியிலிருந்து பிரம்மனும், அதை எடுத்து மரிசி, காசிபார், மனு, சிபி, பாகீரதன் போன்றோர் வழிவந்தனர் என்றும், அந்த வழியில் சோழர்கள் பிறப்பெடுத்தார்கள் என்றும் குறிப்பிடுகிறது. சமஸ்கிருதம், தமிழ் என்ற இரண்டு மொழிகளில் இந்தச் செப்பேடுகள் அமைந்துள்ளன. (Epigraphia Indica, Volume XV, ð‚. 58 -72. பதிப்பாசிரியர்: டி.ஏ.கோபிநாத ராவ்).
அன்பில் செப்பேடு திருவாலங்காடு செப்பேடு ஆகியவை சோழர் குலத்திற்கு ஆரிய புராணங்களில் தோற்றத்தைத் தேடுகின்றன. இவர்களுடைய காலத்தில் மனு தருமம் பேணப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை; சமஸ்கிருதம் உயர்நிலையில் போற்றப்பட்டது என்பதிலும் சந்தேகம் இல்லை.
கரந்தை செப்பேடு முதலாம் இராசேந்திர சோழனின் (கி.பி.1012 - 1044) எட்டாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. இதில் 55 ஏடுகள் உள்ளன. இது சோழர்களை சூரிய வம்சத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறது. சமஸ்கிருதப் பகுதிக்கான ஆங்கில மொழியாக்கத்தை மேற்கோளாகக் காட்டினால், முதலாம் இராசேந்திர சோழனை
“He was the Crest - jewel (Shikhamani )of the Kshatriya race, a sun to the darkness of his enemies, and a kalpa-tree to those who sought refuge in him.” â¡Á ¹è›‰¶ °PŠH´Aø¶. (Karanthai Tamil Sangam Copper Plate Inscriptions of Rajendra Chola I., Edited by K.G. Krishnan, Archaeological Survey of India (Memoirs of the ASI, No. 79); SII, Vol.25, No.57-58). இவ்வாறு சோழர்கள் தங்களை சத்திரியர்களாக அடையாளப்படுத்திக் கொள்வது என்பதன் பொருள் என்ன? வர்ணாசிரம முறையை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளம் இது ஆகும். முதலாம் இராசராச சோழன் ‘சத்திரிய சிகாமணி’ என்ற பட்டத்தை ஏற்றிருந்தான். அவனுடைய பெயரில் ஒரு வளநாடு விளங்கியது.
இராஜராஜனின் 29ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1014) தஞ்சை பெரிய கோயிலில் வெட்டிய கல்வெட்டு ‘சத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டு இடையன்...’ என்று குறிப்பிடுகிறது. (South Indian Inscriptions -SII, Vol. 2, No. 92 ) .
முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகள் (கி.பி 1018-19) சுந்தர சோழரை ‘சத்திரிய சூடாமணி’ என்று குறிப்பிடுகிறது. சத்திரிய சூடாமணி என்பதன் தமிழாக்கமாக ‘சத்திரியர் தலைமணி வளநாடு’ என்ற பெயரில் நிர்வாகப் பகுதி ஒன்று இருந்தது. நாகை, திருவாரூர், கீழ்வேளூர், தேவூர் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன. (South Indian Inscriptions (SII), Volume III, Part III, Section 2 (The Tiruvalangadu Copper-Plates, slokas 61 and 62 )
இராசராச சோழன் தனது தந்தையின் நினைவாக ‘சத்திரிய சூடாமணி மங்கலம்’ என்ற ஊரை உருவாக்கினான். இதனால் சில நேரங்களில் இந்தப் பட்டம் இராசராசனுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது. ஆனால், செப்பேட்டுச் சான்றுகளின்படி, இது இராசராசனின் தந்தை சுந்தர சோழரையே குறிக்கிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் கல்வெட்டுகளில் ‘சத்திரிய சூடாமணி வளநாட்டு திருவாரூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி: 2, கல்வெட்டு எண்: 67).
இராசராச சோழனின் தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் ‘சத்திரிய சிங்க வளநாடு’ என்று ஒரு நிர்வாகப் பகுதி குறிப்பிடப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, அரியலூர் மாவட்டப் பகுதிகள் இதில் அடங்கும். (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 2, கல்வெட்டு எண் 92).
இந்த கல்வெட்டுகளில் இருந்து ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். வர்ணாசிரம அடிப்படையில் நாடு இயங்கியது. சமூகத்தின் நான்காவது வருணம் அந்தந்த சாதிப்பெயர்களிலேயே அடையாளப்படுத்தப்பட்டது. சோழர்கள் பிரம்மதேயங்களை பிராமணர்களுக்கு வழங்கினார்கள். வேதம் ஓதும் பிராமணர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் அளிக்கப்பட்டன. சமூகத்தில் பிராமணர் களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சோழர்கள் ஒரு காலத்திலும் வர்ணாசிரம முறையை மாற்ற முற்பட்டதில்லை.
முதலாம் குலோத்துங்க (கி.பி.1070 - 1120) சோழனின் ‘புகழ் மாது விளங்க..’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி ‘..மனுநெறி தழைப்ப நால்வகை வருணமுந் தத்தம் நிலைமையில் நிற்ப...’ அவன் ஆட்சி புரிந்ததாகப் பதிவு செய்கிறது.
முதலாம் இராஜராஜனின் 29 வது ஆட்சியாண்டில் (கிபி 1014) வெட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் ‘...சத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டு இடையன்..’ என்று குறிப்பிடுகிறது.
முதலாம் இராஜராஜன் ‘சத்திரிய சிகாமணி’ என்றுபல கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறான். (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி: 2, கல்வெட்டுகள்: 1, 4, 5, 9)
மற்றொரு கல்வெட்டில் இராஜராஜ சோழன் பெயரில் அமைந்துள்ள வளநாடு ‘சத்திரிய சிம்ம வளநாடு...’ என்று குறிப்பிடப்படுகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி: 2, எண் 66, 94.)
முதலாம் இராசேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில், தமிழ் பகுதியில் ‘... மனுநெறி தழைப்ப சதுர்வேத நெறி வளர ...’ என்று வருகிறது. (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி: 3, திருவாலங்காடு செப்பேடுகள்). முதலாம் ராஜேந்திர சோழன் வர்ணாசிரம தர்மத்தை ரட்சித்தவன் பாதுகாத்தவன் என்று இக்கல்வெட்டு புகழாரம் சூட்டுகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள இரண்டாம் இராசராசனின் 15வது ஆட்சியாண்டில் (கிபி 1161) வெட்டப்பட்ட, ‘பூமருவிய பொழிலேழும்...’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியில், வர்ணாசிரம பாதுகாப்பு குறித்த சான்று உள்ளது.
‘மனுநெறி தழைப்பச் சதுர்வேத நெறி வளர’ ‘வர்ணாச்சிரமந் தழைப்பத் தர்மஞ் செழிக்க...’ என்று வருகிறது. நான்கு வருணங்களையும், நான்கு ஆசிரமங்களையும் (பிரம்மச்சாரிய, கிரகஸ்தா, வனப்பிரஸ்தா, சன்னியாசின் ஆகியவை) பாதுகாத்தான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி: 8, எண்: 163)
முதலாம் இராஜராஜ சோழன் தன் 29வது ஆட்சி ஆண்டில் (கிபி 1014), தஞ்சை பெரிய கோயில் தெற்குப்புறச் சுவரில் வெட்டுவித்த கல்வெட்டில் நிர்வாகப் பிரிவுகளான ஒன்பது வளநாடுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறான். இதில் நிர்வாகப் பிரிவான ‘சத்திரிய சிம்ம வளநாடு’ என்பதும் குறிப்பிடப்படுகிறது. இதில் இராசராசன் கோயிலுக்கு நேரடியாக வழங்கிய நிலக்கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதலாம் இராசேந்திர சோழனின் 31வது ஆட்சி ஆண்டில் (கிபி 1043) திருவாலங்காடு செப்பேடுகள் வெளியிடப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு வதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு பழையனூர் என்ற கிராமத்தை தேவதானமாக வழங்கியதையே திருவாலங்காடு செப்பேடு குறிப்பிடுகிறது. இந்தச் செப்பேட்டில் சோழ வம்சத்தின் வம்சாவளி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. சோழ வம்சாவளியை புராணப் பின்னணியில் சமஸ்கிருதப் பகுதி விரிவாக விவரிக்கிறது. சோழர்கள் சூரியவம்சத்தினர் என்றும், சூரியனிலிருந்து மனு, அதன் பிறகு இக்ஷ்வாகு, சிபிச்சக்கரவர்த்தி, காவேரிகண்டன், கரிகால் சோழன், கோச்செங்கணான் போன்றோர் வழியில் சோழர்கள் வந்ததாக குறிப்பிடுகிறது.
(விஷ்ணு புராணம் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை குறிப்பிடுகிறபடி, வைவஸ்வத மனுவின் மகன் மனு ஆவார். புராணங்கள் கூறுகிறபடி, நீண்ட காலம் குழந்தைகள் இல்லாமல் இருந்த மனு ஒரு தும்மல் போட்டதில் இக்ஷ்வாகு பிறந்தார். இவர் அயோத்தியை தலைநகராக கொண்டு கோசல நாட்டை ஆளத் தொடங்கினார். இவரே அயோத்தியின் முதல் மன்னர். மனுதர்மத்தை பூமியில் முறையாக அமல்படுத்திய முதல் அரசர். வால்மீகி ராமாயணத்தில் வரும் இராமர் இக்ஷூவாகு வம்சத்தை சேர்த்தவர்.)
இக்ஷீவாகு வம்சத்தில் வந்த சிபி சக்கரவர்த்தி போன்றோரை இராசேந்திர சோழனின் முன்னோர்களாக இது குறிப்பிடுகிறது. சோழர்கள் மரபுக்கு புராண அடிப்படையில் பிறப்பு, தெய்வீகத்தன்மை போன்றவற்றைக் கற்பிக்கிறது.
வடமொழிப் பகுதியில் 69 மற்றும் 70வது சுலோகங்களின் பகுதிகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சித் திறத்தைப் பற்றிக் கூறும்போது, உலகில் கலியுகத்தினால் ஏற்படும் குழப்பங்களை நீக்கி, நான்கு வருணங்களையும் அவற்றிற்குரிய கடமைகளில் நிலை நிறுத்தி காத்தவன் என்று திருவாலங்காடு செப்பேடு பதிவு செய்கிறது.
இது இராசராச சோழனின் மகன் பற்றியது; இராசராச சோழனின் தந்தையாகிய சுந்தரச் சோழரைப் பற்றியும் திருவாலங்காடு செப்பேடு இப்படிக் கூறுகிறது: (வடமொழிப் பகுதியில் 57-வது சுலோகத்தில்) “கலியுகத்தின் தாக்கத்தால் தளர்ந்து போன தனது சட்டங்களை மனுநீதி மீண்டும் நிலை நாட்டுவதற்காக மனுவே இந்த மன்னன் உருவில் மீண்டும் பூமிக்கு வந்திருப்பதாக மக்கள் நம்பினர்.Verse 57: “The mass of people believe this king to be Manu, who, out of Love for the (good ) conduct which was set forth by himself, has come to the earth once again to establish his law which had become lax under the influence of the Kali (age ) .”
சமஸ்கிருத மெய்க்கீர்த்தி
சமுதாய அடுக்கை குறிக்கும்போது நான்கு வர்ணங்களும் (சதுர்வர்ணங்கள்) தத்தம் தர்மங்களைப் பின்பற்றி வாழ்ந்ததாகச் செப்பேட்டின் சமஸ்கிருத மெய்க்கீர்த்திப் பகுதி குறிப்பிடுகிறது. நான்காவது வர்ணத்தைக் குறிக்க சதுர்த்த வருணம் என்று சமஸ்கிருதப் பகுதி குறிக்கிறது. ஆனால், தமிழ்ப் பகுதியில் வேளாளர் என்று வருகிறது.
சங்ககாலத்தில் இருந்தே ஆரியத்துக்கு அடிமைப்பட்ட மன்னர்கள் இருந்து வந்திருக்கின்றனர். இராசசூயம் வேட்ட பெறுநற்கிள்ளி, பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி, மனுநீதிச்சோழன் என்ற பெயர்கள் தமிழ் மன்னர்களின் ஆரிய அடிமைத்தனத்தைக் காட்டவில்லையா?
இடைக்காலத்தில் கலிங்கத்துப்பரணி ‘மனுவினுக்கு மும்முடி நான் மடியாஞ் சோழன்...’ என்று கூறுகிறது.
முதல் குலோத்துங்கன் ‘மனு குல தீபன்’ என்ற சிறப்புப்பெயரை எடுத்துக்கொண்டான். அவனுடைய ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு புகழ்கிறது:
“...மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
செங்கோல் திசைதொறுஞ் செல்ல...”
சோழ மன்னர்களின் மெய் கீர்த்திகள் இந்த மன்னர்கள் எப்படி ஆரிய அடிமைகளாக இருந்தார்கள், எப்படி மனுதர்மத்தை நிலை நிறுத்தினார்கள் என்பதைப் பதிவு செய்கிறது. இரண்டாம் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தியில்,
“மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க
மாதவர் தவமும் மங்கையர் கற்பும்
ஆதி அந்தண ராகுதிக் கனலு
மீதெழு கொண்டல் வீசுதண் புனலு
மேதினி வளருஞ் சாதி ஒழுக்கமும்
நீதி அறமும் பிறழாது நிகழப்
பாவம் பழனப் பரப்பும் பணைக்கை
மாவு மல்லது வன்றளைப்படுதல்...” என்று புகழப்படுகிறான். அதாவது, இரண்டாம் குலோத்துங்கன் மனுதர்மம் விளங்கச் செய்தானாம்; சாதி ஒழுக்கத்தை காத்தானாம். இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தியில்,
“...அருமறை விதிநெறி யனைத்துந் தழைப்ப வருமுறை யுரிமையில் மணிமுடி சூடி திங்கள் வென்கொடை திசைக்களிரட்டும் ...”
என்று புகழப்படுகிறான். இவனுடைய ஆட்சிக்காலத்தில் மறைநெறி நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாம் இராசாதிஇராச சோழனது மெய்க்கீர்த்தியில்,
“சமய மாறும் தலையெடுப்பத் தருமமும் மரு மறையு மோங்கி அமைவில்லா மனுவொழுக்க மாதியாம்படி நிலை நிற்க...”
என்று பேசப்பட்டுள்ளது. ஆறுவகை சமயமும், வர்ணாசிரம தர்மம், மறைகளும், மனுநீதி வரையறுத்த ஒழுக்கமும் வளர்க்கப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தி,
“... புயல் பெருக வளம் பெருகப் பொய்யாத நான்மறையின் செயில் வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்து வாழ ...” என்று நான்மறை ஆதிக்கம் செலுத்தியதைப் பதிவு செய்கிறது. மூன்றாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தி,
“....ஒப்பறிய மறை நூலும் உரை திறம்பா மனு நூலுஞ்
செப்பறிய வடகலையும், தென்கலையுந் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலை நான்கு நிலை நிற்ப
ஆதியுகங் குடிபுகுத அறுசமயம் தழைத்தோங்க..” என்று பேசுகிறது.
இவனுடைய ஆட்சியில், வேதங்கள் சிறப்பிக்கப்பட்டதையும், மனுநூல் பின்பற்றப்பட்டதையும், வடகலையும் தென்கலையும் செழித்ததையும், மனு சாத்திரம் வகுத்துத் தந்த நான்கு வர்ணங்களும் நிலைநிறுத்தப்பட்டதையும், ஆறு வகை சமயங்கள் தழைத்தோங்கியதையும் பதிவு செய்கிறது. மூன்றாம் இராசேந்திர சோழனது மெய்க்கீர்த்தி
“...வீரராட்சசன் எனப் போற்றப் படுபவனும், லங்காராமன் என்னும் பெயருடையானும், மனுக் குலத்தை உயர்த்தியவனும்...” என்று தொடர்கிறது.
இந்தப் பதிவுகள் அனைத்தும் சோழ அரசர்கள் மனுதர்மத்தை கடைப்பிடித்தனர் என்பதையும், நாட்டில் நடைமுறைப்படுத்தினர் என்பதையும் தெளிவாகப் பதிவு செய்கின்றன. இந்த சோழ மன்னர்கள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு ஏராளமான பிரம்மதேயங்களை வழங்கியதும், அவர்களுடைய நலன் பாதுகாக்கப்பட்டதும், சமூகத்தில் சாதிகளும், சாதி அடிப்படையில் படிநிலைத் தகுதிகளும் உருவாக்கம் பெற்றதும், அடிமைமுறை விரிவாக்கம் பெற்றதும், சாதி அடிப்படையில் இழிவுகளும், துயரங்களும் எளிய மக்கள்மீது சுமத்தப்பட்டதும் சோழர்கள் கால வரலாற்றின் மறைக்க முடியாத ஒரு கூறுதான். சோழர்கள் காலத்தில் வர்ணாசிரம முறை ஏற்கப்பட்டிருந்தது என்பதற்கு ஏராளமான கல்வெட்டு மற்றும் செப்பேட்டுச் சான்றுகள் இருக்கின்றன. இந்நிலையில் சோழர்கள் காலத்தில் வர்ணாசிரம முறையே கிடையாது என்றும், ஏற்றத்தாழ்வு என்பதே கிடையாது என்றும் எழுதுவது அப்பட்டமான பொய்யல்லவா?
ஒரு நிலவுடைமை காலகட்டத்தின் அத்தனை சமூக ஒடுக்குமுறைகளும் துயரங்களும் சோழர்கள் காலத்திலும் இருந்தன; அதன் பிறகும் அவை தொடர்ந்தன. சோழர்கள் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன; வேளாண்மைத் தகவமைப்புகள் உருவாக்கப்பட்டன; பல நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டன. ஆனால், அதே நேரம் மக்களில் ஒரு பகுதியினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டனர் என்ற நிலையும் இருந்தது. நாட்டின் தீண்டாச்சேரியும் இருந்தது. பெண்களை உடன்கட்டை ஏற்றும் பழக்கமும் இருந்தது. பெண்களை அடிமைகளாக கோயில்களுக்கும் பெருமக்களுக்கும் விற்கும் பழக்கம் இருந்தது. இவை கடந்த கால உயர்வும் துயரங்களும்.
இந்நிலையில், சோழர்கள் தமிழ் மன்னர்கள் என்று கூறி, அதைப் பொற்காலம் எனப் போற்றுவதும், அதை தங்கள் அடையாளமாக முன்னிறுத்துவதும் மிகவும் பிற்போக்குத்தனமானது. சோழ மன்னர்கள் தங்கள் சாதிக்காரர்கள் என்று எந்த அடிப்படையுமின்றி சில சாதிகள் சொந்தம் கொண்டாடுவதும், தாங்கள் ‘ஆண்ட சாதிகள்’ என்று பெருமை பேசுவதும், சாதி உணர்வை விசிறி விடுவதும், பிற சாதிகளை அடக்கி ஆள முற்படுவதும், நாம் அடைந்துவிட்டதாகக் கருதும் ஜனநாயக அரசு முறையையும், சனநாயக சிந்தனையையும் கேலி செய்வதாகும். ஆகவே, தமிழ்த்தேசிய இனத்தின் பொற்காலம் எதிர்காலத்தில் இருக்கிறது; கடந்த காலத்தில் இருந்ததாக கற்பனை செய்து கொண்டு மயங்கக் கூடாது.
கட்டுரையாளர்: பேராசிரியர், வரலாற்றுத்துறை (ஓ)
நமது தமிழ்மண் பிப்ரவரி 2026